பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.
குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.
இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.
சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.
சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.
""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.
ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.
""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை
பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.
பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.
""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.
0 comments:
Post a Comment