Jan 15, 2011

கலைப்போராளி சீமான்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்?
வியூகத்தை விளக்கும் சீமான்




ஒரு புலியும் ஒரு புலியும் சந்தித்தால்...’ - வைகோவின் அலுவலகம் சென்று சீமான் சந்தித்ததைப் பற்றி ஊடக உலகத்தில் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழர் தாயகத்துக்காக போராடி வரும் வைகோவும், சீமானும் ஜனவரி 10-ம் தேதி ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்... வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சீமான். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் அ.தி.மு.க.வை மீண்டும் சீமான் ஆதரிப்பது பற்றி தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்புகள் முளைத்திருக்கும் நிலையில், சீமானிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

வைகோவுடனான சந்திப்பு பற்றி...

நான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தபோது... அய்யா நெடுமாறனுடன் என்னை சந்தித்து தைரியம் கூட்டியவர் அண்ணன் வைகோ. நான் விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனதார விரும்பியவர். என் விடுதலைக்காக பல கூட்டங்களில் முழங்கியவர். இது மரியாதை நிமித்தமான, அன்பு நிமித்தமான அண்ணன்-தம்பி சந்திப்பு.

என் விடுதலையை விரும்பிய பழ. நெடுமாறன் அய்யா, அண்ணன் திருமாவளவன், என்னுடைய வழக்குரைஞர்கள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். இது எல்லாமே அரசியலைத் தாண்டிய பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையிலான பாச சந்திப்புகள்தான்.

இரட்டை இலைக்கு ஆதரவு கேட்பேன் என சொல்லியிருக்கிறீர்களே?

எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதல்ல... யார் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். தமிழகத்தில் ஆயிரம் மக்கள் பிரச்னைகளையும் ஈழத்தில் லட்சக்கணக்கான எம் உறவுகள் நொடிக்கு நொடி சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த-போதும் பதவி சுகத்துக்காக அவற்றையெல்லாம் அவதானிக்காமல் விட்டது தி.மு.க.

போர் நடத்தியது காங்கிரஸ்... அதை பின்புறம் நின்று ஆதரித்து, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துரோகம் செய்தது தி.மு.க. இந்த நிலையில்... பதவி சுகத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த காங்கிரஸையும், கலைஞரையும் மீண்டும் அந்த பதவி சுகத்தை அனுபவிக்கவே விடக்கூடாது.

ஒருவேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால்... ‘ஈழத்தில் போரா? அப்படியொன்று நடக்கவே இல்லை. அங்கே தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள். இலவச திட்டங்களை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்’ என்று ஊடகச் சர்வாதிகாரம் மூலம் உண்மையை மறைத்து... ஈழ விவகாரத்தின் சுவடே தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது.

என் இனத்தையே அழித்த காங்கிரஸ் கட்சியை நான் என் தாய்மண்ணிலிருந்து அழிக்கவேண்டும். அதனால்தான் காங்கிரஸுக்கு எதிரான வலிமை மிக்க அணியை ஆதரிக்கிறோம்... காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு.

நேற்றுவரை காங்கிரஸ் கூட்டணிக்காக பகிரங்கமாக முயற்சி செய்தவர் ஜெயலலிதா. இந்நிலையில், இனியும் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என நம்புகிறீர்களா?

இதில் எனக்கு என்ன பிரச்னை? காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.வையும் எதிர்த்துதான் முழங்குவான் இந்த சீமான். என் பொது எதிரி காங்கிரஸ். அதோடு, யார் சேர்ந்தாலும் எதிர்ப்போம். இதில் குழப்பமே இல்லையே... காங்கிரஸுக்கு எதிராக இரட்டை இலை இல்லை... வேறு எந்த இலை நின்றாலும் ஆதரிப்பேன். இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.

இன்று நாங்கள் சுபாஷ் சந்திரபோஸின் நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடையவேண்டும். ஆனால், அதற்கான யுத்தம் நடத்துவதற்காக போதுமான வலிமை சந்திரபோஸிடம் இல்லை. அதற்காக அவர் வெள்ளையனை எதிர்க்கும் வெளிநாட்டு ராணுவத்தின் உதவியை நாடினார்.

எங்களுக்கு இப்போது அரசியல் களத்தில் தனியாக நின்று யுத்தம் நடத்துவதற்கான வலிமை இல்லை. அதற்காக யுத்தத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிற கோழைகள் அல்ல நாங்கள். நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில்... என் எதிரியை யார் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களோடு இணைந்து போராடுவதுதான் எங்கள் நிலைப்பாடு.

இதற்காக ஜெயலலிதா மனிதப் புனிதவதி என்றோ, சொர்க்கத்தின் ஆட்சியை தரப்போகிறார் என்றோ, நான் போற்றிப் புகழப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத போக்கில் செயல்பட்டால், எதிர்த்து முழங்கும் முதல் ஆளாக சீமான்தான் இருப்பான்.

இலைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என என்னைக் கேட்டுக்கொள்ளும் நண்பர்கள்... வேறு என்ன செய்யலாம் என்று எனக்கு யோசனை சொல்லலாமே? தேர்தல் வரைக்கும் எங்கேயாவது வெளியூர் செல்லச் சொல்கிறார்களா? ‘பகலவன்’ படத்தை இப்போதே ஆரம்பித்து படப்பிடிப்பு நடத்து என்று சொல்லப் போகிறார்களா?

சிறை மீண்ட பின் தமிழக அரசின் மீது வழக்குத் தொடுப்பதாக சொல்லியிருந்தீர்களே?

‘‘ஆம். அதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். நான் சிறையிலிருந்தது சட்டவிரோதம் என்று ஆனபிறகு, அந்த சட்டமீறலை செய்த தமிழக அரசு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

தவிர, சிறையிலிருந்து வெளிவந்த பின்னும் எனக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டிருக்கிறது தமிழக அரசு. சீமான் எங்கே பேசச் சென்றாலும், அனுமதி மறுக்கப்படுகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடக்க இருந்த உண்ணாவிரதத்தில் நான் கலந்துகொள்கிறேன் என்று தகவல் கிடைத்ததும், உண்ணாவிரதத்துக்கே அனுமதி மறுத்துவிட்டனர்.

நெய்வேலியில் என்னுடைய பொதுக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டபோது... ‘சீமான் நெய்வேலியில் பேசினால், மின் உற்பத்தி பாதிக்கப்படும்’ என்று அனுமதி மறுப்புக்கு காரணத்தை எழுதிக் கொடுத்திருக்கிறது காவல்துறை. இந்த அடக்குமுறையை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் எதிர்த்துத்தான் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்...’’

-வெடித்து முடித்தார் சீமான்.

0 comments:

Post a Comment